Showing posts with label Jayakanthan. Show all posts
Showing posts with label Jayakanthan. Show all posts

Saturday, April 25, 2015

ஜெயகாந்தனின் "உன்னைப் போல் ஒருவன்" - விமர்சனம்

ரசிகர்களுக்காக தமது எழுத்தில் எந்தவிதமான சமரசத்தையும் செய்து கொள்ளாத ஜெயகாந்தனின் நேர்மையான எழுத்து. வட்டார மொழியில் கதை எழுதுவது பிரபலமாகாத காலத்தில் சென்னை தமிழில் எழுதப்பட்ட முன்னோடி கதை. ஜெயகாந்தன் ரசிகர்களுக்கு எது பிடிக்கும் எனப் பார்த்து தமது எழுத்தை அதற்குத் தகுந்தாற் போல அமைப்பவர் இல்லை. இந்தக் கதையும் அப்படிப் பட்டதே. எல்லாருக்கும் பிடிக்க வாய்ப்பில்லை.

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தான். அவனுக்கு ஒரு மகள் இருந்தால் என்ற ரீதியில் கதையை அறிமுகப்படுத்தாமல், ஆசிரியர் கதையை அறிமுகப் படுத்தும் விதமே மிகவும் வசீகரமாக உள்ளது. தங்கம் என்ற முக்கியமான பாத்திரம் யார், அவள் வயது என்ன, கல்யானமாணவளா, பணக்காரியா அல்லது ஏழையா, என்ன வேலை செய்கிறாள், எப்படி இருப்பாள், எங்கே வசிக்கிறாள், அவளுக்கு குழந்தை உண்டா, மகனா அல்லது மகளா என்ற அடிப்படை விஷயங்களை ஆசிரியர் முதல் சில பக்கங்களில் அறிமுகப்படுத்தும் விதம் அறிமுக எழுத்தாளர்களுக்குப் பால பாடமாக அமைக்கப் பட வேண்டும்.

இந்தக் கதாபாத்திரம் நல்லது, அது கெட்டது என வேறுபடுத்த வேண்டிய அவசியம் இக்கதையில் இல்லை. மனிதர்களின் மாறுப்பட்ட குணாசிதயங்களை அவர்கள் போக்கிலேயே சென்று அவர்களுக்குள் நடக்கும் உணர்ச்சிகளை மையமாக வைத்து புனையப் பட்ட கதை. கதையின் கட்டுமானத்தில் எந்த குறையும் சொல்ல முடியாது. இருந்தாலும் தனிப்பட்ட வகையில் எனக்கு இந்தக் கதை அவ்வளவாகப் பிடிக்கவில்லை.

சென்னை மொழியை முழுமையாகப் பயன்படுத்தியிருந்தாலும், மிகச் சிறிய இடங்களில் பிராமண பாஷையில் பயன்படுத்தப் படும் வார்த்தைப் பிரயோகங்கள் வருகின்றன. அது ஒரு மிகச் சிறிய குறையே.


Thursday, September 25, 2014

ஜெயகாந்தனின் "ஜெய ஜெய சங்கரா" - My review

இந்த உலகத்தைச் சற்று கூர்ந்து கவனித்தால் தெரிய வரும். பக்தன் என்பவன் கண்மூடித்தனமாக மதச் சடங்குகளை நம்புபவன் என அறியப்படுகிறான். சதா சர்வ காலம் காரணமின்றி தெய்வ நிந்தனையும் பக்தர்களைக் கிண்டலும் செய்பவன் நாத்திகன் என அறியப் படுகிறான். உழைப்பதற்கு கேள்விகள் கேட்பவன் கம்யூனிஸ்ட் என அறியப் படுகிறான். இப்படி பல சித்தாந்தங்கள் - ஒன்றை ஏற்பவன் அடுத்ததை முற்றிலுமாக நிராகிக்கிறான். இது துரதிர்ஷ்டமான விஷயம் - ஆனால் உலகம் இப்படித் தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது.

 காதல், மோதல், துப்பறிதல் என எத்தனையோ விஷயங்கள் இருக்க இந்த கதை வித்தியாசமான அதே சமயத்தில் சுவையானதொரு களத்தில் பயணிக்கிறது. நாத்திகன், காந்தியவாதி, ஆன்மீகவாதி, சந்நியாசி, தேச பக்தன், கம்யூனிஸ்ட், அரசாங்க ஊழியன் என பல சித்தாந்தங்களை பின்பற்றுபவர்களை ஒரே கோணத்தில் ஒரு பொதுவான நன்மைக்காக உடன்பட வைக்கிறது. ஜெயகாந்தனைத் தவிர யாராலும் இப்படி பல்வேறு நம்பிக்கைகளை அதன் சாதக அம்சங்களுடன் சுவையாக அலச முடியாது. 


எமர்ஜென்சி காலத்தில் நடை பெரும் இக்கதை யாரும் எதிர் பாராத கோணத்தில் எழுதப்பட்டுள்ளது. அனைத்து விஷயங்களையும் நடு நிலையோடு பார்ப்பவர்களால் மட்டுமே இக்கதையை புரிந்து கொள்ளவும் பாராட்டவும் முடியும்.

 இக்கதை தமிழ் உரை நடையில் ஒரு முத்திரை.

ஜெயகாந்தனின் "ஈஸ்வர அல்லா தேரே நாம்" - My review

இரண்டு வகையான எழுத்தாளர்கள் உண்டு; முதல் சாரார் வாசகர்களுக்குப் பிடித்ததை எழுதுபவர்கள். அடுத்த சாரார் தனக்குப் பிடித்ததை எழுதுபவர்கள். ஜெயகாந்தன் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். வியாபார ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்றோ பெரும்பாலான வாசகர்களைக் கவர்வதற்கோ எழுதாத கம்பீர எழுத்தாளர். அதனால் தான் அவருடைய எழுத்துக்கள் பரவலாக வாசிக்கப்பட்டாலும் எல்லோருக்கும் பிடிப்பதில்லை. இந்த நாவலும் பெரும்பாலானவர்களுக்குப் பிடிக்க நியாயமில்லை. ஆனால் என்னைப் பொருத்தவரை இவருடைய ஆகச் சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று.

 துப்பறியும் நாயகன், விசேஷ சக்தி படைத்த கதாபாத்திரம் போன்றவர்கள் ஒரே எழுத்தாளனுடைய பல கதைகளில் வருவது உண்டு. ஆனால் இக்கதை நாயகர்களில் ஒருவரான ஆதி காந்தியவாதி - மிகவும் மதிக்கத்தக்கவர். ஜெயகாந்தனின் பிற கதைகளிலும் வந்த கதாபாத்திரம். இதுவே ஒரு வித்தியாசமான முயற்சி என்பேன்.

 காதல் கதை தான் இது - ஆனால் கம்பீரமான விரசமில்லாத காதல். மதச் சண்டை பின்னணியில் எழுதப்பட்ட கதை. சரியாக கையாளா விட்டால் அதுவே பிரச்சனையாகி இருக்கும். இம்மாதிரியான கதைகளைக் கையாள்வதில் ஜெயகாந்தன் ஒரு முன்மாதிரி.

 படித்து ரசித்துப் பாருங்கள் - இப்படிப்பட்ட கதைகள் தமிழில் வருவது அரிது.